×

ஆந்திராவில் 56, 741 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது மாறுபட்ட ஜேஎன் 1 கொரோனா பரவல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை

* அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

* கிராம, வார்டு செயலகங்களில் ரேபிட் டெஸ்டிங் கருவிகள்

திருமலை : ஆந்திராவில் மாறுபட்ட ஜேஎன் 1 கொரோனா பரவல் குறித்து முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 56 ஆயிரத்து 741 ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.கொரோனாவின் புதிய வகை வைரசான ஜேஎன் 1 தொற்றானது இந்தியா உட்பட 40 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 21 பேருக்கு ஜேஎன் 1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அவ்வாறு ஆந்திர மாநிலத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் முகாம் அலுவலகத்தில் புதிய வகை கோவிட் பரவல் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார். இதில் கோவிட்டின் புதிய வகை ஜே.என்-1 வெரியண்ட் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இதுகுறித்து ஜெகன் மோகன் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மதிப்பாய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகள் பேசியதாவது: ஜே.என்1 வெரியண்ட் கோவிட் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இந்த மாறுபட்ட கோவிட் பாதிக்கப்பட்டவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் குணமடைந்து வருகின்றனர். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அவர் குணமடைந்து வருகின்றனர். டெல்டா மாறுபாடு போன்ற அம்சங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் ஜே.என்.1 கோவிட் வேகமாக பரவும் பண்புகளைக் கொண்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனைகளில் பரிசோதித்து வருகிறோம். விஜயவாடா ஜீனோம் ஆய்வகத்தில் பாசிட்டிவ் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சோதனைகள் புதிய வகைகளை அடையாளம் காண உதவும். கிராம மற்றும் வார்டு செயலகங்களில் ரேபிட் டெஸ்டிங் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சுயபரிசோதனை தொகுப்பும் வைக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் உள்ளன அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆக்ஸிஜன் உள்கட்டமைப்பு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் டி ரக சிலிண்டர்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. 56,741 ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. புதியவகை கோவிட் மாறுபாட்டால் கவலைப்படத் தேவையில்லை. மிகவும் வலுவாக உள்ள கிராம மற்றும் வார்டு செயலக அமைப்பு, கிராம மருத்துவ மனை அமைப்பு ஆகியவை முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் பேசினர்.புதிய மாறுபாட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கிராம மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

ஜேஎன் 1 கொரோனா குறித்து உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டார். மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விடத்தலா ரஜினி, முதன்மை செயலாளர் டாக்டர் கே.எஸ். ஜவஹர், சிறப்பு சி.எஸ்.எம்.டி கிருஷ்ணபாபு, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, சுகாதார இயக்குநர் எஸ். வெங்கடேஷ்வர், மருத்துவக் கல்வி இயக்குனர் டி.எஸ்.வி.எல்.நரசிம்மம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post ஆந்திராவில் 56, 741 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது மாறுபட்ட ஜேஎன் 1 கொரோனா பரவல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Jaganmohan ,Tirumala ,Andhra ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில்...